கூடலூர், ஆக. 19: கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரூற்றுப்பாறை அரசு ஆரம்பப் பள்ளியின் மேற்கூரை ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகள் உடைந்துள்ளதால் மழை காலத்தில் வகுப்பறைகளின் உள்ளே தண்ணீர் ஒழுகி மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இப்பள்ளி கட்டிடத்தின் அருகில் பள்ளியின் கழிப்பறைக்கான புதிய கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பழைய கழிப்பறை இடிக்கப்பட்ட நிலையில் அதன் அருகில் கட்டப்பட்டிருந்த காம்பவுண்ட் சுவர்கள் அகற்றப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக காம்பவுண்ட் சுவரின் ஒருபகுதி சரிந்து பள்ளி கட்டத்தின் மீது சாய்ந்துள்ளது.
வகுப்புகள் இல்லாத நேரத்தில் சம்பவம் நடைபெற்றதால் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. பள்ளி வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரை சேதம் குறித்து மாவட்ட கலெக்டருக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கடந்த ஜூன் மாதம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பள்ளியில் ஒழுகும் மேற்கூரையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.