டிரேடிங்கில் அதிக லாபம் தருவதாக கோவை தொழிலதிபரிடம் ரூ.1.20 கோடி மோசடி: வக்கீலிடம் சென்றதால் ரூ.90 லட்சம் தப்பியது
கோவை, நவ. 11: டிரேடிங்கில் அதிக லாபம் தருவதாக தொழில் அதிபரிடம் ரூ.1.20 கோடி மோசடி செய்துள்ளனர். அவர் வக்கீலிடம் சென்றதால் ரூ.90 லட்சம் தப்பியது. கோவையை சேர்ந்தவர் 45 வயது தொழில் அதிபர். இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் தொடர்பு கொண்டு உள்ளார். அவர், தொழில் அதிபரிடம் தான் டிரேடிங் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், எங்களது நிறுவனத்தின் மூலம் முதலீடு செய்து டிரேடிங் செய்து வந்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி உள்ளார்.இதைத்தொடர்ந்து, தொழில் அதிபர் அவர்கள் அனுப்பிய லிங் மூலம் முதலீடு செய்து டிரேடிங் செய்து வந்தார். அதில், அவருக்கு சிறிய லாபம் கிடைத்தது. அதன்பின், அவர் பல்வேறு தவணைகளாக ரூ.1 கோடியே 20 லட்சம் முதலீடு செய்தார். அப்போது அவரது கணக்கில் ரூ.3 கோடி வரவு வைக்கப்பட்டது. அதனை அவர் எடுக்க முயற்சி செய்தார்.
ஆனால், அவரால் அந்த பணத்தை எடுக்க முடியவில்லை. இதனை அவர் அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அந்த பெண் ரூ.90 லட்சம் செலுத்தினால் ரூ.90 லட்சத்துடன் ரூ.3 கோடியை எடுத்து கொள்ளலாம் என கூறினார்.
இதையடுத்து அவர் தனது சொத்தை அடமானம் வைத்து அந்த பணத்தை ஏற்பாடு செய்ய வக்கீலை அணுகி உள்ளார். வக்கீல் அவரிடம் எதற்காக அடமானம் வைக்கிறீர்கள் என கேட்ட போது அவர் விவரங்களை தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த வக்கீல் அது மோடி கும்பல் என கூறியுள்ளார். இதையடுத்து தொழில் அதிபர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

