கோவை, நவ. 11: கோவை சின்னதடாகம் அருகே உள்ள கருப்பராயன் பாளையத்தை சேர்ந்தவர் தனபால் (35). தொழிலாளியான இவருக்கு மகேஸ்வரி(30) என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில், தனபால் அடிக்கடி மதுபோதையில் மனைவியை அடித்தும், பெற்றோர் வீட்டுக்கு சென்று வரதட்சணை வாங்கி வர சொல்லியும் துன்புறுத்தி வந்துள்ளார். இதற்கிடையே, மகேஸ்வரி மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதும், தனபால் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மகேஸ்வரி குழந்தையுடன் தற்கொலை செய்யும் முடிவை எடுத்தார். அதன்படி, கடந்த 11.12.2018ம் ஆண்டு மகேஸ்வரி பீளமேடு - வடகோவை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட தண்டவாளத்தில் குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்தார். இதில் தாய், மகன் இருவரும் பலியானார்கள். கர்ப்பிணி என்பதால் வயிற்றில் இருந்த சிசுவும் இறந்து போனது. இந்த சம்பவம் மகேஸ்வரி குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து கோவை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தனபால் மீது வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரராஜன் குற்றம் சாட்டப்பட்ட தனபாலுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் வக்கீல் பி.ஜிஷா ஆஜராகி வாதாடினார்.

