ஈரோடு, டிச.9: மொடக்குறிச்சி துய்யம்பூந்துறை பறையன்காட்டு வலசை சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் வெற்றிவேல் (30). இவர் கடந்த 6ம் தேதி இரவு ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே காளை மாட்டு சிலை பகுதியில் குடிபோதையில் சாலையோரம் விழுந்து கிடந்தார். அப்போது அங்கு வந்த நபர், வெற்றிவேல் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்க நகையை பறித்து சென்றார்.
இதுகுறித்து, ஈரோடு தெற்கு போலீசில் வெற்றிவேல் புகார் செய்திருந்தார். அதன் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், காளைமாடு சிலை பகுதியில் இருந்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்து விசாரித்து வந்தனர். இதில், ஈரோடு கொல்லம்பாளையம் பீமன்காட்டு வீதியை சேர்ந்த கற்பகவேல் (27) என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, கற்பகவேலை போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே மொடக்குறிச்சி போலீசில் ஒரு திருட்டு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.


