குன்னூர், டிச. 7: டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆண்டுதோறும் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்ட எஸ்பி நிஷா உத்தரவின்பேரில், குன்னூர் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரில் பல்வேறு இடங்களில் நேற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் போலீசார் மேற்கொண்டனர். குறிப்பாக குன்னூர் மலை ரயில்நிலையம், பேருந்து நிலையம் உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த உடமைகளை போலீசார் தீவிர சோதனை நடத்திய பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகளை கொண்டு உடமைகள் சோதனை செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி ரயில் நிலையங்களில் சந்தேகத்தின் பேரில் நவீன கருவிகளுடன் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். கோயில்கள், மசூதிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


