நாமக்கல், செப்.15: நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று 59 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ.25.17 லட்சத்திற்கு விற்பனையானது.
நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. நாமக்கல், எருமப்பட்டி, மோகனூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களில் அதிகமான பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறி மற்றும் பழங்களை வாங்கி செல்வார்கள். நேற்று ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட உழவர் சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.
198 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 49,030 கிலோ காய்கறிகள், 10,510 கிலோ பழங்கள் மற்றும் 35 கிலோ பூக்கள் என மொத்தம் 59,575 கிலோ எடையுள்ள விளைபொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. 11,915 பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து, காய்கறி, பழங்கள் வாங்கி சென்றனர். நேற்று ஒரேநாளில் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.25,17,620க்கு விற்பனையானதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.