நாமக்கல், செப்.30: முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வுக்கு காலஅவகாசம் வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் தேர்வர்கள் மனு அளித்தனர். முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு எழுத உள்ள தேர்வர்கள் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் துர்காமூர்த்தியிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு வரும் 12ம்தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டம் அதிகரிப்பு, புதிய நடைமுறை காரணமாக போதுமான கால அவகாசம் இல்லாத நிலை உள்ளது. தேர்வர்களின் நலன்கருதி, தேர்வை நவம்பர் மாதம் நடத்தவேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. ஆனால் இதுகுறித்து அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. எனவே ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தேர்வு தேதியை மாற்றம் செய்து அறிவிக்க மாவட்ட நிர்வாகம், மாநில கல்வித்துறைக்கு பரிந்துரை செய்யவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
+
Advertisement