நாமக்கல், அக்.28: நாமக்கல் அருகே உள்ள தூசூரை சேர்ந்தவர் கதிர்வேல் (78), விவசாயி. இவரது மனைவி காமாட்சி (75). இவர் கடந்த பிப்ரவரி 16ம்தேதி அதிகாலை சிறுநீர் கழிக்க வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர், காமாட்சியின் வாயை பொத்தி, அருகில் உள்ள மாட்டு கொட்டகைக்கு இழுத்து சென்று, அவர் அணிந்து இருந்த 5 பவுன் தாலிக்கொடியை பறித்து சென்றார். இதுகுறித்து காமாட்சி நாமக்கல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவாய்பட்டியை சேர்ந்த பரத் மனோ (26) என்ற வாலிபர் நகையை பறித்து சென்றது தெரியவந்தது. போலீசார் அவரை தேடி வந்த நிலையில், கரட்டுப்பட்டியில் இருந்து வேப்பனம் செல்லும் சாலையில் நின்று கொண்டு இருந்த பரத் மனோவை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர், அவரிடம் இருந்து காமாட்சியிடம் பறித்து சென்ற நகையை போலீசார் மீட்டனர். விசாரணையில், நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் போதையில் உள்ள நபர்களை மிரட்டி பணம் பறித்து வருவது தெரியவந்துள்ளது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


