ராசிபுரம், செப்.27: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர்.குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன்(78). இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் 2 ஏக்கர் நிலம் இருந்த நிலையில், அந்த நிலத்தை கடந்த 2019ம் ஆண்டு சேலம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்த நிலையில், அவர் குருசாமிபாளையம் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் அவர் அங்கு வீட்டுமனை அமைத்து, விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், நிலத்திற்கு செல்லும் வழியில் 150ஆண்டு பழமை வாய்ந்த புளிய மரம் உள்ளது.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சிலர், புளிய மரத்தின் மேல் பகுதியில் மர கிளைகளை வெட்டி அதில் ஆசிட் ஊற்றியுள்ளனர். அதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு செல்வதற்குள், மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இதுகுறித்து பழனியப்பன் பிள்ளாநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் பெரியசாமியிடம் புகார் மனு அளித்திருந்தார். புகார் மனுவை பெற்ற விசாரணைக்கு சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் பெரியசாமி பார்வையிட்டு, இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.