பரமத்திவேலூர், நவ.25:பரமத்திவேலூரை அடுத்துள்ள கோலாரம் அருகே, கரிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (45). இவரது மகள் பவதாரணி (18), பரமத்திவேலூரில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி முதலாம் ஆண்டு படித்து வந்தார். ரவி கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால், அவரது தாய் சரோஜா மொடக்குறிச்சியில் கட்டிட சித்தாள் வேலைக்கு சென்று வந்தார். பவதாரணி பாட்டி மல்லிகா(60) வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இதனிடையே பவதாரணி, தனது உறவினரான வாலிபரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதையறிந்த அவரது தாய் சரோஜா, அவரை செல்போனில் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த பவதாரணி கடந்த 3ம்தேதி வீட்டிலிருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். `பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் பவதாரணி உயிரிழந்தார். இது குறித்து அவரது தாய் சரோஜா அளித்த புகாரின் பேரில், நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
+
Advertisement



