நாமக்கல், நவ.25:நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்,எருமப்பட்டி, பொன்னேரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் துர்காமூர்த்தியிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: எருமப்பட்டி ஒன்றியம், பொன்னேரி கிராமத்தில் 700 குடும்பங்களும், காளிசெட்டிப்பட்டிபுதூரில் 300 குடும்பங்களும் வசித்து வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு எருமப்பட்டி வந்து செல்ல வேண்டி உள்ளது. மேலும் மருத்துவமனை, வங்கி மற்றும் அரசு அலுவலகங்கள், வாரச்சந்தை, கோயில், பஸ் போக்குவரத்து என அனைத்து வகையிலும் எருமப்பட்டி- பொன்னேரி சாலையை பயன்படுத்தி வருகிறோம். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் இந்த சாலை வழியாக தான் செல்லவேண்டும். எருமப்பட்டி- பொன்னேரி சாலையில் டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும். எனவே புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் மதுக்கடையை வேறு பகுதிக்கு மாற்றி அமைக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
+
Advertisement



