நாமகிரிப்பேட்டை, அக்.25: வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதியில் ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சியில் சிறப்பு நிதியின் கீழ் ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் நாடார் தெரு மெயின் ரோடு முதல் குடிநீர் தொட்டி வரை, தார்சாலை அமைக்கும் பணி, வெண்ணந்தூர் காவல் நிலையம் அருகில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணி ஆகியவற்றை கலெக்டர் துர்கா மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், அறிவுசார் மையம் மற்றும் நாகர்பாளி தெருவில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களில், அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வெண்ணந்தூர் ஒன்றியம் தொட்டியவலசு பகுதியில் மகளிர் சுயஉதவிக் குழு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பட்டுப்புழு வளர்ப்பு தொகுப்பினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். தொட்டியவலசு கிராம ஊராட்சி சேவை மையத்தில், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் பராமரிக்கும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டவர், அங்கு பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் மோளகவுண்டன் வலசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். இந்த ஆய்வின் போது பேரூராட்சி தலைவர் ராஜேஷ், செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி துணைத்தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
