சேந்தமங்கலம், செப்.24: நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம் புதன்சந்தையில், வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை கூடுவது வழக்கம், திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மதியம் வரை சந்தை நடைபெறும். மாடுகளை வாங்க -விற்க ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் மற்றும் உள்ளூர் விவசாயிகள், வியாபாரிகள் திரண்டு வருவர். கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும். நேற்று கூடிய சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களிலிருந்து கறவை மாடுகள், இறைச்சி மாடுகள், காளை மாடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்திருந்தது. மாடுகளை வாங்க அதிகளவில் வியாபாரிகள் வந்திருந்தனர். வெளி மாநிலங்களுக்கு மாடுகள் விற்பனை அதிகரித்துள்ளது. கர்நாடகா, கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மாடுகளை வாங்க வந்திருந்தனர். ஓணம் முடிந்த நிலையில், கேரளாவில் இறைச்சி நுகர்வு அதிகரித்துள்ளது. இதனால், மாடுகளின் விலை உயர்ந்தது. இறைச்சி மாடுகள் ரூ.25 ஆயிரத்திற்கும், கறவை மாடுகள் ரூ.48 ஆயிரத்திற்கும், கன்றுக்குட்டிகள் ரூ.18 ஆயிரத்திற்கும் விற்பனையானது. ஆக மொத்தம் ரூ.2.70 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.
+
Advertisement