நாமகிரிப்பேட்டை, செப்.23: நாமகிரிப்பேட்டை அருகே விவசாயி வீட்டை இடித்தவர் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே முள்ளுக்குறிச்சி மாவாறு பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி(55). விவசாயியான இவரது அக்கா சரோஜாவிற்கு சொந்தமாக 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதன் ஒரு பகுதியில் சுமார் 3 செண்ட் நிலத்தில், சுப்ரமணி வீடு கட்டி குடியிருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுக்கு முன்பு, சரோஜா தனது நிலத்தை முழுவதும், தம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் ரவி என்பவருக்கு விற்றுவிட்டார். ஆனால், சுப்ரமணி வீட்டை காலி செய்யமால் வாய்தா கேட்டு வந்துள்ளார். பலமுறை கேட்டும் காலி செய்ததால், நேற்று சுப்ரமணி வீட்டை ரவி இடித்து விட்டார். இதுகுறித்து ஆயில்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சுப்ரமணி புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் விசாரித்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, ரவியை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
+
Advertisement