சேந்தமங்கலம், ஆக.23: எருமப்பட்டி அருகே பண்ணையில் இருந்த 20 நாட்டுக்கோழிகள் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டியை சேர்ந்தவர் தியாகராஜன்(48), லாரி டிரைவர். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் பண்ணை அமைத்து 50க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கோழிகளுக்கு தானியங்கள் கொடுத்து விட்டு லலிதா வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை பண்ணைக்கு வந்து பார்த்தபோது, 20 நாட்டுக் கோழிகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த லலிதா எருமப்பட்டி போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணையில், நள்ளிரவில் பண்ணைக்குள் புகுந்து நாட்டுக்கோழிகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
+
Advertisement