திருச்செங்கோடு, ஆக.23: திருச்செங்கோடு செங்குந்தர் கல்வி நிறுவனங்களில் தேசிய மாணவர் படை, இளைஞர் செஞ்சிலுவை சங்கம், ரெட் ரிப்பன் கிளப், நாட்டு நலப்பணி திட்டம் மாணவர்கள் மற்றும் சார்க் அறக்கட்டளை, சேலம் ரத்த வங்கியுடன் இணைந்து ரத்த தானம் முகாம் நேற்று செங்குந்தர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலாளருமான பாலதண்டபாணி தலைமை வகித்தார். செயல் இயக்குனர் அரவிந்த் திருநாவுக்கரசு, செங்குந்தர் பொறியியல் கல்லூரி முதல்வர் சதீஷ்குமார், மருந்தியல் கல்லூரி முதல்வர் சுரேந்திரகுமார், செவிலியர் கல்லூரி முதல்வர் நீலாவதி மற்றும் துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு ரத்தம் வழங்கினர். சேலம் ரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் டாக்டர் ராம் ரத்த தானத்தால் உண்டாகும் பயன்கள் குறித்தும், உடல் ஆரோக்கியம், சுவாச நோய் அதன் அறிகுறிகள் பற்றியும், நோய் தடுப்பு வழிமுறைகள் குறித்தும் மாணவர்களிடம் கூறினார். இதில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ரத்த தானம் வழங்கினர். அவர்களுக்கு சேலம் ரத்த வங்கியின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
+
Advertisement