நாமக்கல், செப்.22: நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் நவராத்திரி விழா இன்று(22ம் தேதி) தொடங்குகிறது. நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற நரசிம்ம சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜைக்கு முன்பாக 9 நாட்கள் நவராத்திரி கொலு விழா கொண்டாடப்படும். வரும் 1ம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, நாமக்கல் நரசிம்மர் கோயிலில் இன்று(22ம் தேதி) மச்ச அவதாரத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார்.
நாளை(செவ்வாய்க்கிழமை) கூர்ம அவதாரம், 24ம் தேதி(புதன்கிழமை) வாமன அவதாரம், 25ம் தேதி ரங்கமன்னார் திருக்கோலம், 26ம் தேதி ராமாவதாரம், 27ம் தேதி(சனிக்கிழமை) கிருஷ்ணவதாரத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார். வரும் 28ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) பரமபதநாதர் அலங்காரம், 29ம் தேதி(திங்கட்கிழமை) மோகன அவதாரம், 30ம் தேதி(செவ்வாய் கிழமை) ராஜாங்கசேவையில் சுவாமி அருள்பாலிக்கிறார்.
வரும் 1ம் தேதி(புதன்கிழமை) நாமக்கல் குளக்கரையில் அரங்கநாத சுவாமியும், நரசிம்ம சுவாமியும் எழுந்தருளி அம்பு விடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 2ம் தேதி விசேஷ திருக்கோலம் ஆகியவை நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் ஆன்மிக சொற்பொழிவுகள், பக்திப் பாடல்கள் இசைத்தல், பஜனை பாடுதல், லலிதா சகஸ்ரநாம பாராயணம் உள்ளிட்டவை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.