சேந்தமங்கலம், செப்.22: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன்(58). கார் டிரைவரான இவரது மனைவி சபினு. இவர்களுக்கு ராகினி, உஷா நந்தினி என்ற மகள்களும், கவிச்செல்வன் என்ற மகனும் உள்ளனர். கண்ணன் நேற்று தனது நண்பர்கள் பாலு, அஜய் ஆகியோருடன் அமாவாசையையொட்டி, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள மாசி பெரியசாமி கோயிலுக்கு சுவாமி கும்பிடுவதற்காக வந்துள்ளார்.
அடிவாரம் நத்துக்குளி பட்டியிலிருந்து மலை மீது நண்பர்களுடன் ஏறிச்சென்று கோயிலில் வளாகத்தில் அமர்ந்துள்ளனர். அப்போது, கண்ணன் திடீரென நெஞ்சு வலிப்பதாக தெரிவித்துள்ளார். இதனால், திடுக்கிட்ட நண்பர்கள் குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளனர். தண்ணீரை வாங்கி குடித்த சிறிது நேரத்தில் கண்ணன் மயங்கி சரிந்தார். உடனடியாக அவரை மீட்டு செம்மேடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கண்ணனை டோலி கட்டி மீட்டு செம்மேடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, கண்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லிமலை கோயிலுக்கு வந்த டிரைவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.