சேந்தமங்கலம், ஆக.22: எருமப்பட்டி அருகே மேட்டுப்பட்டி ஊராட்சியில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எருமப்பட்டி ஒன்றியம், மேட்டுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடுகப்பட்டி பொதுமக்கள் கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வடுகப்பட்டி மாரியம்மன் கோயில் சாலையில் இருந்து, காந்திநகர் இணைப்பு சாலை கோடாங்கிப்பட்டி மற்றும் எருமப்பட்டி வரை செல்கிறது. பல வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் சென்று வருவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலையை மீண்டும் புதுப்பித்து சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement