நாமகிரிப்பேட்டை, அக்.17: நாமகிரிப்பேட்டை அடுத்த ராஜாபாளையம் காணியாச்சிக்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன்(60). இவரது மனைவி கவிதா(50), இவர்களுக்கு அதே பகுதியில் விவசாயம் நிலம் உள்ளது. இவரது தோட்டத்திற்கு அருகில், அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவருக்கு பொது வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடத்தை ரவீந்தரன், ராமசாமி தரப்பினர் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் ராமசாமி, தனக்கு சொந்தமான வழிதடத்தில் வரக்கூடாது என ரவீந்திரன் குடும்பத்தினரை தடுத்துள்ளார். இதுகுறித்து ரவீந்திரன் ஆயில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் இருதரப்பினரிடம் விசாரணை நடத்தி, சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். இந்நிலையில், கவிதா நேற்று ஆடு, கோழி, மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக பொருட்களை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 2 பெண்கள், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தீவனங்களை கீழே கொட்டி, அவரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த கவிதாவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement