நாமகிரிப்பேட்டை, அக்.17: வெண்ணந்தூர் பேரூராட்சியில் உள்ள தெருக்களின் பெயர்களை மாற்றம் செய்வது தொடர்பாக பொது மக்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தெருக்கள், சாலைகள், குடியிருப்புகள் போன்றவற்றில் சாதி பெயர் உள்ளவை பட்டியலிடப்பட்டுள்ளது. அத்தகைய பெயர்களை மாற்றம் செய்வது தொடர்பாக பொதுமக்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி தலைவர் ராஜேஷ், துணை தலைவர் மாதேஸ்வரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட குழுவினர், 9வது வார்டு அருந்ததியர் தெரு மற்றும் 14வது வார்டு அருந்ததியர் தெரு பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் முழு ஒத்துழைப்போடு, இக்கூட்டம் நடைபெற்றது. இதில், பெரும்பான்மையான மக்களால் தற்போதுள்ள அருந்ததியர் தெருவின் பெயரை மாற்றம் செய்ய வேண்டாம் எனவும், அதுவே தங்களை அடையாளப்படுத்தும் விதமாக உள்ளதால், தற்போதுள்ள பெயரே தொடர விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், மக்களின் கோரிக்கை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
+
Advertisement