Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொப்பரை விலை தொடர்ந்து சரிவு

சேந்தமங்கலம், நவ.12: சேந்தமங்கலம் வட்டாரத்தில், கொப்பரை விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டாரத்தில் கொல்லிமலை அடிவார பகுதியான வாழவந்திகோம்பை, நடுக்கோம்பை, பொம்மசமுத்திரம், பெரியபள்ளம்பாறை, சின்னப்பள்ளம்பாறை, காளப்பநாயக்கன்பட்டி, வெண்டாங்கி, பேளுக்குறிச்சி, மேலப்பட்டி, கல்குறிச்சி, வெட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் அதிக அளவில் தென்னை மரங்களை வளர்த்து வருகின்றனர். கொல்லிமலை அடிவார பகுதி என்பதால், மிதமான தட்பவெப்ப சூழ்நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக, இங்கு விலையில் தேங்காய் களி பருப்புகள் அடர்த்தியாகவும், எண்ணெய் பசை அதிக அளவில் உள்ளதால் வெளிமார்க்கெட்டுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.

இப்பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள், குத்தகை எடுத்து கொப்பரையை விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். மேலும், அப்பகுதி விவசாயிகள் தாங்களே கூலி ஆட்களை வைத்து, தேங்காய்களை பறித்து, அதனை வெட்டி களத்தில் காய வைத்து பருப்பை தனியாக பிரித்து எடுத்து அதனை கொப்பரையாக்கி விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக கொப்பரை விலை தொடர்நது சரிந்து வருகிறது. கடந்த வாரம் கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்ட கொப்பரை, இந்த வாரம் மேலும் விலை குறைந்து. தற்போது கிலோ ரூ.170 முதல் ரூ.180வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தொடர் மழை காரணமாக சேந்தமங்கலம் வட்டார பகுதிகளில் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. தேங்காய் விலை குறைந்துள்ளதால், கொப்பரை விலையும் குறைந்து கொண்டே வருகிறது,’ என்றார்.