சேந்தமங்கலம், செப்.11: புதன்சந்தை சுற்றுவட்டார பகுதியில் வெளுத்து வாங்கிய மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுச்சத்திரம் ஒன்றியம் புதன்சந்தை, மின்னாம்பள்ளி, செல்லப்பம்பட்டி, பொம்மைகுட்டைமேடு, சர்க்கார் உடுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர். இப்பகுதிகளில் நிலக்கடலை, மக்காச்சோளம் பயிரிட்டு, செடிகள் நன்கு வளர்ந்த நிலையில் காய்கள் பிடிப்பதற்கு போதிய மழை இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்தனர். மக்காச்சோளம், நிலக்கடலை தோட்டங்களில் களைகள் எடுக்கப்பட்டு மழை பெய்தால் உரங்கள் வைப்பதற்காக, மழைக்காக விவசாயிகள் காத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தது. காற்று இல்லாமல் மழை பெய்ய தொடங்கி, சிறிது நேரத்தில் கனத்த மழை பெய்தது. இதனால் விவசாய நிலங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. புதன்சந்தை சாலை பகுதியில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. புதன்சந்தை சுற்றுவட்டார பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
+
Advertisement