பள்ளிபாளையம், அக்.10: பள்ளிபாளையத்தில், துணிக்கடை பூட்டை உடைத்து உண்டியல் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காகித ஆலை காலனி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ரதிதேவி, அருகில் உள்ள தாஜ்நகரில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை வந்து பார்த்த போது, கடையின் முன்புற ரோலிங் ஷட்டரில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கடையின் உள்ளே கல்லா திறந்து கிடந்தது. டேபிள் மேல் வைத்திருந்த உண்டியல் காணவில்லை. நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள், பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்துள்ளனர். கல்லாவில் பணம் ஏதும் இல்லாததால் அருகில் இருந்த உண்டியலை திருடிச்சென்றது தெரியவந்தது. உண்டியலில் சுமார் பத்தாயிரம் ரூபாய் இருக்குமென தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி நள்ளிரவில் அப்பகுதியில் நடமாடியவர்கள் விபரம் குறித்து சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement