பள்ளிபாளையம், ஆக.8: பள்ளிபாளையம் அருகே தாயின் தகாத உறவால் ஏற்பட்ட பிரச்னையில், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கட்டநாச்சம்பட்டி யாதவர் தெருவை சேர்ந்தவர் சங்கீதா. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், கணவர் பாஸ்கரை பிரிந்து, 2 பெண் குழந்தைகளுடன் பள்ளிபாளையம் வந்தார். இங்கு அலமேடு பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, விசைத்தறி கூடத்தில் வேலை செய்து வருகிறார். தற்போது மூத்த மகள் துர்கா நந்தினி (16), அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். இளைய மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே, சங்கீதாவுக்கும் திருச்செங்கோட்டை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி குமரவேலுக்கும், கடந்த சில வருடமாக பழக்கம் ஏற்பட்டது. தற்போது குமரவேல் அலமேட்டில் சங்கீதாவுடன் தங்கியுள்ளார். குமரவேலுக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். இதனால் குமரவேல் இரண்டு வீடுகளிலும் மாறி மாறி வசித்து வந்துள்ளார்.
நேற்று காலை, குமரவேலுவின் முதல் மனைவி கவிதா, கணவனை தேடி அலமேட்டில் உள்ள சங்கீதா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, கவிதாவுக்கும், சங்கீதாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை அக்கம் பக்கம் உள்ளவர்கள் வேடிக்கை பார்த்துள்ளனர். இதனால் அவமானமடைந்த துர்கா நந்தினி தனது தாயாரை கண்டித்து, வாக்குவாதத்தை கைவிடும்படி கெஞ்சியுள்ளார். ஆனால் வாய்ச்சண்டை தொடரவே, மனமுடைந்த துர்கா நந்தினி, வீட்டில் ஒரு அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டார். வாய்த்தகராறு ஓய்ந்த பின்னர், சங்கீதா தனது மகள் இருந்த அறையை தட்டியும் கதவு திறக்கவில்லை.
இதனால் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது, மின்விசிறியில் துர்கா நந்தினி தூக்கு மாட்டி சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த தகவலின் பேரில், பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று பள்ளியில் கலைத்திருவிழா நடைபெற்றது. இதில் மாணவி துர்கா நந்தினி நடனமாடும் நிகழ்ச்சி இருந்தது. ஆனால், குடும்ப பிரச்னையில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.