ராசிபுரம், டிச.7: நாமகிரிப்பேட்டை அருகே மெட்டாலா ஆஞ்சநேயர் கோயில் காவலாளியின் டூவீலரை திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் நாகிரிப்பேட்டை ஒன்றியம் கார்கூடல்பட்டியை சேர்ந்தவர் பெரியண்ணன் மகன் சின்னுசாமி(45). இவர், மெட்டாலா ஆஞ்சநேயர் கோயிலில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். வழக்கமாக வீட்டில் இருந்து டூவீலரில் பணிக்கு வந்து விட்டு, மறுநாள் வீடு திரும்புவார். நேற்று முன்தினம் மாலை வேலைக்கு வந்த சின்னுசாமி டூவீலரை அன்னதாக கூடத்திற்கு முன் நிறுத்திவிட்டு கோயிலில் உட்கார்ந்திருந்தார். அவருடன் பூசாரி விஜயகாந்த்தும் இருந்துள்ளார்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் வண்டியை தள்ளி செல்லும் சத்தம் கேட்டு சின்னுசாமி திடுக்கிட்ட விழித்தார். அப்போது, வாலிபர் ஒருவர் டூவீலரின் சைடு லாக்கை உடைத்து தள்ளிச்செல்ல முயன்றதை கண்டு திடுக்கிட்டார். உடனே, அவரை மடக்கி பிடித்து கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த பூசாரி விஜயகாந்த் நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில், அவர் தம்மப்பட்டி ஒட்டர் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் தினேஷ்(24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷை கைது செய்தனர்.


