ராசிபுரம், நவ.7: ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில், கொட்டும் மழையிலும் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில், தேர்த்திருவிழா கடந்த 28ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 4ம் தேதி அதிகாலை, பூவோடு எடுக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து, பூசாரி முன் வரிசையாக பக்தர்கள் நின்று சாட்டையடி வாங்கிச் சென்றனர். தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. முக்கிய நிகழ்வான தீ மிதி விழா நேற்று நடந்தது. நேற்று முன்தினம் இரவு, கோயிலின் அருகில் குழி வெட்டி தீ குண்டம் பற்ற வைக்கும் பணி தொடங்கியது. நள்ளிரவு தீ பற்ற வைக்கப்பட்டு எரியத்தொடங்கியது. இரவு பூசாரி தீக்குண்டத்தில் இறங்கிய பின்பு, பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் தீ மிதித்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், அதிகாலை முதல் பெய்த தூறல் மழையையும் பொருட்படுத்தாமல் தீ மிதித்தனர். இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை தீயணைப்பு மற்றும் போலீசார் மேற்கொண்டனர்.
+
Advertisement

