நாமக்கல், நவ.7: சேலம், நாமக்கல் மாவட்டத்தில் ரூ.59.94 லட்சம் மதிப்பிலான 10.81 மெட்ரிக் டன் தரமற்ற விதைகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக, சேலம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சித்ரா தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சித்ரா தலைமையில், விதை ஆய்வாளர்கள், தொடர்ந்து விதை விற்பனை நிலையங்களை ஆய்வு செய்து வருகின்றனர். சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் என 1,393 விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. இந்த விற்பனை நிலையங்களில் விதைகளின் தரம் குறித்த ஆய்வு, அந்தந்த பகுதி விதை ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் வரை 4,427 விதைகள் ஆய்வுகள் செய்யப்பட்டது. இதில், விதைகளின் தரத்தை அறிய 2,333 விதை மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பகுப்பாய்வு முடிவில் 92 விதை மாதிரிகள் தரமற்றது என அறிவிப்பு பெறப்பட்டது.
இவற்றில் 8 விதை மாதிரிகள் எடுக்கப்பட்ட விதை உற்பத்தியாளர்கள் மீது நீதிமன்ற வழக்குகள் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 91 விதை குவியல்கள் விற்க தடை உத்தரவுகள் வழங்கப்பட்டு, தரமற்ற விதைகள் விற்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.59.94 லட்சம் மதிப்பிலான 10.81 மெட்ரிக் டன் தரமற்ற விதைகள் விற்பது தடுக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகள் விதைகளை வாங்கும் போது, விதைகளின் தரம் குறித்த விபரங்களை சரிபார்த்து வாங்க வேண்டும். விதைகளுக்குரிய பட்டியல்களை கேட்டு பெற வேண்டும். விதைப்பு முதல், பயிரின் விளைச்சல் வரை பட்டியலை பத்திரப்படுத்தி வைத்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

