குமாரபாளையம், டிச.6: வேமங்காட்டுவலசு அரசு உயர்நிலை பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடைபெற்ற போட்டிகளில் பள்ளி குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். குமாரபாளையம் வேமங்காட்டு வலசு அரசு உயர்நிலைப் பள்ளியில், தமிழ்க் கூடல் நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் மாதேசு தலைமை வகித்து பேசினார். பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் அஜந்தா முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் குமார் வரவேற்புரையற்றினார். தமிழ் கூடல் நிகழ்வை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, கவிதை எழுதும் போட்டி மற்றும் கடிதம் எழுதும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காந்தி நாச்சிமுத்து பரிசு வழங்கி பாராட்டி பேசினார். வள்ளுவர் கூறும் அறம் என்னும் தலைப்பில், திருவள்ளுவர் முத்தமிழ் மன்ற செயலாளர் கைலாசம் உரையாற்றினார். திருவள்ளுவர் முத்தமிழ் மன்றத்தின் தலைவர் ஆறுமுகம் வாசிப்பை நேசிப்போம் என்னும் பொருளில் பேசினார். தமிழாசிரியர் மேனகா நன்றியுரையாற்றினார். ஆசிரியர்கள் முத்து, அருள், கீதா மாதேஸ்வரி, அம்சா, தங்கராசு, ஜெகதீஸ்வரன் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement

