நாமக்கல் ஆக.5: நாமக்கலில் வரும் 7ம்தேதி கைத்தறி கண்காட்சி நடைபெறுகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 11வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு “நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில்” வரும் 7ம்தேதி கைத்தறி கண்காட்சி மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இக்கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். கண்காட்சியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி துணி ரகங்களான ராசிபுரம் பட்டு சேலைகள், இளம்பிள்ளை மற்றும் ஆர்.புதுப்பாளையம் பருத்தி சேலைகள் மற்றும் காட்டன் கோர்வை சேலைகள், கைத்தறி வேட்டி ரகங்கள், கைத்தறி துண்டுகள், பவானி ஜமுக்காளம், பெட்சீட்கள் மற்றும் கால்மிதி (மேட்) ஆகிய ரகங்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் தள்ளுபடி மானியத்துடன் விற்பனை செய்யப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் அனைவரும் இக்கண்காட்சியில் கலந்து கொண்டு, கைத்தறி துணிகளை வாங்கி பயன் பெறவேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
+