மல்லசமுத்திரம், டிச. 4: காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருநாள் சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோயிலில், நேற்று கார்த்திகை நட்சத்திரம் மற்றும் தீபத்திருநாளை முன்னிட்டு மூலவர் கந்தசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அருள்பாலித்தார். முன்னதாக பால், தயிர், தேன், இளநீர், விபூதி மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷோகம் நடந்தது. கோயில் வளாகத்தில் பல வகையான வண்ண மலர்கள் மற்றும் காய், கனிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்சவர் முருகன் வள்ளி, தெய்வாணையுடன் உட்பிறகாரத்தில் சிறப்பு தோற்றத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் கோயில் முன்பு தீபமேற்றி வழிபாட்டனர். இரவு 7 மணிக்கு கோயில் வெளிப்புறத்தில் லட்சுமண கவுண்டர் சமாதி அருகில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜை ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
பரமத்திவேலூர்: கார்த்திகை தீபம் மற்றும் கிருத்திகையை முன்னிட்டு கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், பொத்தனூரில் உள்ள பச்சமலை முருகன் கோயில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள சுப்பிரமணியர், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல்வடிவம் கொண்ட சுப்பிரமணியர், பிலிக்கல்பாளையம், கரட்டூரில் உள்ள விஜயகிரி வடபழனி ஆண்டவர், பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோயில் முருகன், பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி கோயில், கந்தம்பாளையம் சுப்பிரமணியர், நன்செய் இடையாறு சுப்பிரமணியர், கோப்பணம்பாளையம் மற்றும் பொத்தனூர் பாலமுருகன் கோயில்களில் நேற்று சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பத்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

