சேந்தமங்கலம், ஜூலை 28: கொல்லிமலை மாசிலா அருவியில் சிறுவர் பூங்கா, சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவியில் குளிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக மாசிலா அருவியில் சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் எளிதாக சென்று குளித்து வர முடியும். வயதானவர்கள், குழந்தைகள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் என அனைவருமே எளிதாக அருவியின் அருகில் சென்று நீண்ட நேரம் குளித்துவிட்டு பாதுகாப்பாக திரும்புவதற்கு அனைத்து வசதிகளும் உள்ளது. கடந்த சில மாதங்களாக மாசிலா அருவி செல்லும் சாலை மழையின் காரணமாக பழுதடைந்து குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. நுழைவுவாயில் இருந்து செல்லும் சாலை, கார் பார்க்கிங் ஆகியவை மிகவும் பழுதடைந்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்கள் சென்று வருவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
மேலும் அங்குள்ள சிறுவர் பூங்காவில் போதிய பராமரிப்பு இல்லாததால் குழந்தைகள் விளையாட முடியாத நிலை இருந்து வந்தது. சாலையையும், சிறுவர் பூங்காவையும் சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்று, அரசு தற்போது வல்வில் ஓரிவிழா நடைபெற உள்ளதால் சிறப்பு செயலாக்க திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.28 லட்சத்தில் சாலை, கார் பார்க்கிங் சீரமைக்கப்படுகிறது. ரூ.12 லட்சத்தில் சிறுவர் விளையாட்டு பூங்கா மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
வல்வில் ஓரி விழாவிற்கு முன்பு அனைத்து பணிகளும் நிறைவு பெற்று சுற்றுலா பயணிகளில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் ஈஸ்வரன் தெரிவித்தார்.