பள்ளிபாளையம், ஆக.3: ஆடி பெருக்கை முன்னிட்டு பள்ளிபாளையத்தில் பல்வேறு இடங்களில் உள்ள மாரியம்மன், முனியப்பன் கோவில்களில் தீர்த்தகுடங்களுடன் வழிபாடு நடந்தது.
ஆடி பெருக்கு நாளில் பள்ளிபாளையத்தில், காவிரிகரையோரங்களில் உள்ள முனியப்பன் கோவில்களில் திருவிழா நடைபெறும். கண்ணனூர் மாரியம்மனுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடமெடுத்து நேர்த்தி கடன் செலுத்துவார்கள். இது தவிர காகித ஆலை காலனி பாலம், எல்லை முனியப்பன் உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் உள்ள கோயில்களில் பொங்கல் வைத்து கிடா வெட்டி விருந்தினர்களுடன் மகிழ்ச்சியாக விழாவை கொண்டாடுவது வழக்கம். இதன்படி நேற்று சனிக்கிழமை, நகரம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டது. வீதி வீதியாக மாரியம்மன், முனியப்பன் கோவில்களில் தீர்த்த குட ஊர்வலம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.
இன்று அதிகாலை, காவிரியில் நீராடி கரையோரங்களில் உள்ள அம்மனை வழிபட்டு ஆடு, கோழி வெட்டி உறவினர்களுக்கு அசைவ விருந்து படைக்கும் பரபரப்பில் பள்ளிபாளையம் மக்கள் உள்ளனர். விழாவை முன்னிட்டு கண்ணனூர் மரியம்மன் கோயில் திடலில் பிரமாண்டமான தூரிகள், ராட்டினங்கள், சிறுவர்களை கவரும் வகையிலான விளையாட்டு பொருள்களை கொண்ட கடைகள் போடப்பட்டிருந்தன. பண்டிகை காரணமாக பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு புதன்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.