பரமத்திவேலூர், ஜூலை 28: காவிரியில் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், கரையோர பகுதி மக்களுக்குவருவாய்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியாற்றில் 98 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1லட்சம் கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சோழசிராமணி, ஜமீன் இளம்பள்ளி, குரும்பலமகாதேவி, கொத்தமங்கலம், ஜேடர்பாளையம், வடகரையாத்தூர், ஆனங்கூர், அ.குன்னத்தூர், பிலிக்கல்பாளையம், சேளூர், கொந்தளம், வெங்கரை, பொத்தனூர், பரமத்திவேலூர், நன்செய் இடையாறு, கொமராபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு வருவாய்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, மீன் பிடிக்கவோ, ஆற்றை கடந்து செல்லவோ கூடாது என பரமத்திவேலூர் தாசில்தார் முத்துக்குமார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் வருவாய் அலுவலர்கள், அந்தந்த பகுதிகளை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் காவிரி ஆற்றில் வெள்ளம் வரும் அபாயகரமான சூழ்நிலை உள்ளதால் கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களை சந்தித்து எச்சரித்து வருகின்றனர்.
குமாரபாளையம்: மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளதால், பள்ளிபாளையம், குமாரபாளையம் காவிரி கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு வருவாய்துறையினரும், உள்ளாட்சி அமைப்பினரும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து வருகின்றனர். ஆற்றின் படித்துறை பகுதியில் பொதுமக்கள் ஆற்றில் இறங்குவதை தடுக்க போலீசார் பாதுகர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குமாரபாளையம் ஆற்றில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலத்தில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் இருபுறமும் போலீசார் தடுப்பு அமைத்து வாகனங்கள், பொதுமக்கள் செல்ல தடை செய்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக, கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துவைக்கவோ கூடாது. தண்ணீரில் இறங்கி செல்பி எடுக்கவோ கூடாது. கரையோரங்களில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி குமாரபாளையம் தாசில்தார் சிவக்குமார் எச்சரித்துள்ளார்.