நாமக்கல், ஆக.18: நாமக்கல் மாவட்ட எஸ்பி விமலா, பேளுக்குறிச்சி, ஆயில்பட்டி, மங்களபுரம் காவல் நிலைய பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். பேளுக்குறிச்சி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பழனியப்பர் கோயில் மலை அடிவார பகுதிகளிலும், மங்களபுரம் பகுதியில் உரம்பு கிராமம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும், ஆயில்பட்டி மற்றும் கார்கூடல்பட்டி ஆகிய பகுதிகளில், ஏற்கனவே மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளை சந்தித்து எஸ்பி கலந்துரையாடினார். அப்போது, கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், சாராயம் காய்ச்சும் தொழிலை விட்டு மனம் திருந்தியவர்களின் மறுவாழ்வுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், கள்ளச்சாராயம் குடிப்பதால் உடல்நிலை பாதிப்பு, அதனால் குடும்பத்தில் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்புகள் பற்றியும், கள்ளச்சாராயம் விற்பது, காய்ச்சுவதை தடுப்பது குறித்தும் எஸ்பி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்பவர்கள் குறித்து புகார் அளிப்பவர்களுக்கு அரசு அறிவித்துள்ள சன்மானம் பெற்றுத்தரப்படும் என அவர்
தெரிவித்தார்.