நாமக்கல், நவ.15: நாமக்கல்லில், ஹெல்மெட் அணிந்து பைக்கில் செல்பவர்களுக்கு, மோர் வினியோகம் செய்து, போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நாமக்கல் நகரில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டும் நபர்கள் மீது, போக்குவரத்து போலீசார் தொடர்ந்து அபராதம் விதித்து வருகின்றனர். தமிழக அளவில், சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறும் மாவட்டங்களில் நாமக்கல் 3வது இடத்தில் உள்ளது. ஹெல்மெட் அணியாமல், டூவீலர்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். இதை தடுக்கும் நோக்கில், நாமக்கல் போக்குவரத்து போலீசார் தினமும் வாகன தணிக்கை நடத்தி வழக்குபதிவு செய்து வருகின்றனர்.
ஹெல்மெட் அணியவேண்டும் என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் போக்குவரத்து போலீசார், கடந்த இரண்டு நாட்களாக, நாமக்கல் நகரில் ஹெல்மெட் அணிந்து டூவீலர்களில் செல்பவர்களுக்கு மோர் கொடுத்து பாராட்டி வருகின்றனர். இது குறித்து போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் கூறுகையில், நாமக்கல் நகரில், சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கவும் மக்களிடம் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கடந்த இரண்டு நாட்களில் ஹெல்மெட் அணிந்து டூவீலர் ஓட்டி வந்த 200 பேருக்கு மோர் பாக்கெட் வழங்கியுள்ளோம்.
இது போன்ற விழிப்புணர்வு தொடர்ந்து செய்யப்படும். டூவீலரில் செல்வர்கள் ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டும். டூவீலரில் 2 பேர் மட்டுமே செல்லவேண்டும். 3 பேர் செல்வதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். வாகன பதிவு எண் கட்டாயம் இடம் பெற்றிருக்கவேண்டும். பதிவு எண் இல்லாமல் இயக்கப்படும் டூவீலர்கள் பறிமுதல் செய்யப்படும். டூவீலரை வேறு ஒருவரிடம் இருந்து விலைக்கு வாங்கினால், உடனடியாக ஆர்டிஓ அலுவலகங்களில் பெயர் மாற்றம் செய்துவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
