Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

10,061 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்

நாமக்கல், நவ.15: நாமக்கல் மாவட்டத்தில் நடப்பாண்டு 10,061 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட உள்ளதாக ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்தார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நேற்று காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இருந்து காணொலி மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார். இதையடுத்து, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். மாதேஸ்வரன் எம்.பி., ராமலிங்கம் எம்எல்ஏ., மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., பங்கேற்று 339 மாணவ, மாணவிகளுக்கு ரூ.16.36 லட்சம் மதிப்பிலான இலவச சைக்கிள்களை வழங்கினார்.

அப்போது, அவர் பேசியதாவது: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் நலனிற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழக முதல்வர் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். மேலும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின், காலை உணவுத் திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து, கல்வித் தரத்தினை உயர்த்த இல்லம் தேடி கல்வி, நம் பள்ளி நம் பெருமை, எண்ணும் எழுத்தும், நம்ம ஸ்கூல் பவுண்டேசன், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு, பள்ளிகளில் இணைய வசதி, அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு, அரசு பள்ளியில் பயின்றவர்கள் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி பயில 7.5 சதவீதம் இட ஓதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தொடர்ந்து பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்துகிறார்.

கல்வி செல்வம் ஒன்றே ஒருவரின் வாழ்க்கையை உயர்த்தும் என்பதை கருத்தில் கொண்டு அரசு பள்ளி மாணவிகளின் நலன் கருதி மாணவிகள் உயர்கல்வி பயில மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், இந்த கல்வியாண்டில் 103 அரசுப் பள்ளிகளை சேர்ந்த 4,724 மாணவர்கள், 5,337 மாணவிகள் என மொத்தம் 10,061 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. இலவச சைக்கிள் பெறும் மாணவிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும். இது போன்ற அரசின் பல்வேறு திட்டங்களை நல்லமுறையில் பயன்படுத்தி, நன்றாக கல்வி பயின்று சமூகத்தில் நல்ல நிலையை அடையவேண்டும். இவ்வாறு ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் துணை மேயர் பூபதி, கூட்டுறவாளர் ராணாஆனந்த், முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கிருஷ்ணவேணி, மாவட்ட கல்வி அலுவலர் புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.