சேந்தமங்கலம், நவ.11: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அருகே வளப்பூர் நாடு ஊராட்சி, பெரியகோயிலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ(55), விவசாயி. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சிவக்குமார்.
நேற்று மாலை, சிவக்குமார் வீட்டில் மின் விளக்கு எரியவில்லை. இதயைடுத்து, சிவக்குமார் தனது வீட்டில் மின்விளக்கு எரியவேண்டி, விவசாயி ராஜூவை அழைத்து மின் கம்பத்தின் மீது ஏறி, ஒயரை தட்டி விடும்படி கூறினார். இதை தொடர்ந்து ராஜூ, மின் கம்பத்தின் மீது ஏறி, ஒயரை தட்டி விட்டுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென கால் தவறி, கம்பத்தின் மீது இருந்து ராஜூ கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில், வாழவந்திநாடு போலீசார், விரைந்து சென்று அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

