பள்ளிபாளையம், நவ.11: பள்ளிபாளையம், வெப்படை, வெடியரசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட நூற்புஆலைகளும், ஆட்டோ லூம் நெசவாலைகளும் இயங்கி வருகின்றன. இங்கு சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களின் குழந்தைகளுக்கு வெடியரசம்பாளையம் அரசு பள்ளியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. பிறமொழி குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் வகையில், தமிழக அரசு வழங்கும் உதவித்தொகையுடன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் இணைந்து ஆசிரியர் ஒருவரை நியமித்துள்ளனர். தமிழ் தெரியாத 30 வடமாநில குழந்தைகளுக்கு, தனி வகுப்பு ஒதுக்கப்பட்டு, தமிழ் எழுத்துக்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்தி மட்டுமே தெரிந்த இந்த குழந்தைகள் தமிழ் எழுத்துக்களை ஆர்வமுடன் படித்து எழுதி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பீகாரில் தேர்தல் நடைபெறுவதால், வாக்குரிமை பெற்ற தொழிலாளர்கள் ஓட்டு போடுவதற்காக குடும்பத்தோடு புறப் பட்டு சென்றுள்ளனர். இதனால் 30 குழந்தைகளில் 20 பேர் பெற்றோருடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். உ.பி, ஒரிசா, ஜார்கண்ட் போன்ற தேர்தல் இல்லாத மாநிலங்களை சேர்ந்த சொற்பமான குழந்தைகளே வகுப்பில் உள்ளதால், வகுப்பறை வெறிச்சோடியுள்ளது. சொந்த மாநிலம் சென்ற குழந்தைகளின் வரவுக்காக ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.

