நாமக்கல், செப்.2:நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 2வது நாளாக பரவலாக மழை பெய்தது. நாமக்கல் மாநகரில் 2 மணி நேரம் கொட்டித்தீர்த்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக கடும் வெப்பம் வீசியது. கடந்த ஒரு வாரமாக வெப்பத்தின் அளவு அதிகரித்த வண்ணம் இருந்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காற்றின் வேகமும் அதிகரித்து காணப்பட்டது. போதிய மழை இல்லாததால், கிராமப்புறங்களில் ஆங்காங்கே குடிநீர் பிரச்னை தலைதூக்கியது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. நேற்று 2வது நாளாக, நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. நாமக்கல் நகரில் இடி மின்னலுடன், நேற்று மாலை 5 மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதனால், நகரின் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 2 மணி நேரம் இடைவிடாமல் மழை பெய்ததால், நாமக்கல் நகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவிலும் தொடர்ந்து மழை பெய்தது. நாமக்கல் மாவட்டத்தில் தொடர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மங்களபுரம் பகுதியில் 5 மி.மீ., மழை பெய்துள்ளது.
ராசிபுரத்தில் 3 மி.மீ., சேந்தமங்கலத்தில் 5 மி.மீ., கொல்லிமலையில் 8 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு இயல்பு மழை அளவு 716.54 மில்லி மீட்டராகும். கடந்த மாதம் 26ம் தேதி வரை, 379.29 மில்லி மீட்டர் மழை மாவட்டத்தில் பல பகுதியில் இருந்து பெறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் வரை இயல்பு மழையளவை விட 55.78 மில்லி மீட்டர் அதிகம் மழை பெறப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ஜூலை மாதம் வரை நெல் 642 ஹெக்டேர், சிறு தானியங்கள் 23484 ஹெக்டேர், பயறு வகைகள் 4217 ஹெக்டேர், எண்ணெய் வித்துக்கள் 19963 ஹெக்டேர், பருத்தி 486 ஹெக்டேர் மற்றும் கரும்பு 4398 ஹெக்டேர் என மொத்தம் 53190 ஹெக்டேரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தோட்டக்கலைப் பயிர்களில் தக்காளி 324 ஹெக்டேர், கத்தரி 144 ஹெக்டேர், வெண்டை 135 ஹெக்டேர், மிளகாய் 58 ஹெக்டேர், மரவள்ளி 302 ஹெக்டேர், வெங்காயம் 1526 ஹெக்டேர், மஞ்சள் 1906 ஹெக்டேர் மற்றும் வாழை 1756 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கேற்ப விதைகள் மற்றும் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.