குத்தாலம், அக்.31: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே தேரழுந்தூர் பான்வாசாஹிப் ஒளியுல்லாஹ் தர்ஹா அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் சந்தனக்கூடு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கந்தூரிவிழா தொடங்கியது.
அதனை தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு பாத்தியாக்கள் ஓதப்பட்டு முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு வைபவம் நேற்று விடியற்காலை 2.30 மணிக்கு சந்தனம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு பான்வாசாஹிப் ஒளியுல்லாஹ் தர்காவில் சந்தனம் பூசும் வைபவம் சிறப்புத்துவா ஓதி வழிபாடு நடைபெற்றது.
இதில் சென்னை, தஞ்சை, நாகை, திருவாரூர்,கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சீடர்கள், பங்கேற்றனர். இந்த விழாவில் மத சார்பற்று அனைத்து மதத்தினரும் திரளாக கலந்துக்கொண்டு வழிபாடு செய்தனர். குத்தாலம் காவல் நிலைய ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில் போலீஸார் 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
 
  
  
  
   
