சீர்காழி, அக்.31: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வஉசி தெருவை சேர்ந்தவர் கலியன் மகன் சங்கர் (48) கம்பி பிட்டர். இவருக்கு திருமணமாகி மணிமேகலை என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக சங்கர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மணிமேகலை கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற சங்கர் வீடு திரும்பவில்லை.
இரவு முழுவதும் தேடி கிடைக்காத நிலையில் நேற்று காலை சீர்காழி தென்பாதியில் உள்ள திருவேங்கடம் பிள்ளை குளத்தில் மர்மமான முறையில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார். சீர்காழி போலீசார் விரைந்து வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சங்கர் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? இல்லையென்றால் அவரை யாரும் குளத்தில் தள்ளிவிட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 
  
  
  
   
