செம்பனார்கோயில், நவ.21: செம்பனார்கோயில் அருகே மின்மாற்றியில் சிக்கி பெண் மயில் உயிரிழந்தது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருச்சம்பள்ளி, முடிகண்டநல்லூர், பொன்செய் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக மயில்கள் சுற்றித் திரிகின்றன. இந்நிலையில் முடிகண்டநல்லூர்- காளகஸ்திநாதபுரம் இணைப்பு சாலையில் உள்ள மின்மாற்றியில் பறந்து சென்று பெண் மயில் அமர்ந்திருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பெண் மயில் இறந்து மின்மாற்றியிலேயே உடல் சிக்கிக்கொண்டது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து பின்னர் டிரான்ஸ்பார்மரில் இறந்துகிடந்த மயிலை மீட்டனர். செம்பனார்கோயில் ஒன்றிய பகுதியில் அதிகமாக மயில்கள் சுற்றி திரிவதால் அவ்வப்போது மின்சாரம் தாக்கி இறந்து விடுவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.


