நாகப்பட்டினம், ஆக. 15: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என எம்பி துரைவைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து தென்னக ரயில்வே சென்னை கோட்ட பொது மேலாளர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: கீழைநாடுகளின் லூர்து நகரம் என போற்றப்படும் வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த விழாவிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான யாத்ரீகர்கள் வந்து செல்வார்கள். அதே போல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் வந்து செல்வார்கள். இவர்களின் நலன் கருதி வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். மேலும் ஏற்கனவே இயங்கும் ரயில்களுடன் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.