கீழ்வேளூர். நவ. 12: அண்ணா மண்டலம் 15ல் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான கைபந்து போட்டியில் நாகை மாவட்டம் திருக்குவளை பொறியியல் கல்லூரி இரண்டாம் இடம் பிடித்தது. அண்ணா பல்கலைக்கழக 15வது மண்டல அளவிலான கைபந்து போட்டியினை புனல்குளம் கிங்ஸ் பொறியியல் கல்லூரி நடத்தியது. இந்த போட்டிகளில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 10க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி அணிகள் கலந்து கொண்டன.
இதில் திருக்குவளை பொறியியல் கல்லூரி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று, இரண்டாம் இடம் பிடித்தது. இதையடுத்து போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த திருக்குவளை பொறியியல் கல்லூரி அணியின் வீரர்களுக்கு பாராட்டு விழா திருக்குவளை பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
போட்டியில் வெற்றிப் பெற்று இரண்டாம் இடம் பிடித்த மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் செல்வகுமார் மற்றும் வினோத், விஜயராஜன் ஆகியோரை கல்லூரியின் முதல்வர் கலைச்செல்வன் பாராட்டி பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
