நாகப்பட்டினம், நவ. 12: டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக தமிழக எல்லையான வாஞ்சூர் ரவுண்டானா சோதனை சாவடியில் போலீசார் விடிய, விடிய சோதனை மேற்கொண்டனர். டில்லியில் செங்கோட்டை பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. ஒன்றிய அரசின் பல்வேறு புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக தமிழக எல்லையான நாகப்பட்டினம் அருகே வாஞ்சூர் ரவுண்டானாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்கள் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டது. வாகனங்களை போலீசார் சோதனை செய்வது உடன் வெளிமாநில வாகனங்களை வாகனங்களில் பயணிப்பவர்களின் விவரங்களையும் சேகரித்து விடிய, விடிய சோதனை மேற்கொண்டனர். இதே போல் புகழ் பெற்ற நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம், உள்ளிட்ட இடங்களில் உள்ள விடுதிகளிலும் மாவட்ட காவல் துறையினரின் சோதனைகள் நடந்தது.
