நாகப்பட்டினம், டிச.8: பயிர் சேத பாதிப்புகளை குறைத்து மதிப்பீடு செய்வதை கண்டித்து வரும் 13ம் தேதி நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாகப்பட்டினத்தில், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மழை பாதிப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் தனபால் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிர் சேத பாதிப்புகளை குறைத்து கணக்கு வெளியிடும் வேளாண்துறை அதிகாரிகளை கண்டிப்பது, புதிய டிஜிட்டல் கணக்கெடுப்பை தவிர்த்து பழைய நடைமுறையில் வருவாய் கிராமம் வாரியாக கணக்கெடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 13ம் தேதி நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் காவிரி விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


