மயிலாடுதுறை, டிச.8: மயிலாடுதுறை திருஇந்தளூரில் டிட்வா புயல் மழையால் நீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ள இடங்களை மயிலாடுதுறை எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறையில், டிட்வா புயல் காரணமாக கடந்த தினங்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக மயிலாடுதுறை அடுத்த திருஇந்தளூர் பகுதியில் உள்ள ஸ்ரீ நகர் காலனி , பாடசாலை தெருக்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில் மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு மேற்கண்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற வேண்டும் என்றும், தடைப்பட்ட பகுதிகளில் மின்சாரத்தை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று மின்வாரிய ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மயிலாடுதுறை மத்திய ஒன்றிய செயலாளர் இமயநாதன், மற்றும் ஜனதா ரகு, பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


