வேதாரண்யம், நவ.7: வேதாரண்யம் பகுதியில் தனித்துவமான அடையாள அட்டைக்கு இதுவரை பெயர் பதிவு செய்யாத விவசாயிகள் வருகிற நவ.10ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு வேளாண்மை உதவி இயக்குனர் சத்தியசீலன் கேட்டுக்கொண்டுள்ளார். நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மின்னணு முறையில் தரவுகள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண் போன்று விவசாயிகளுக்கென தனித்துவமான “அடையாள எண்” வழங்கப்பட்டு வருகிறது.
அடையாள அட்டை கேட்டு வேதாரண்யம் பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது பதிவு செய்து வருகின்றனர். இதுவரை பதிவு செய்யாமல் மீதமுள்ள விவசாயிகள் மற்றும் முன்னோர்கள் பெயரில் பட்டா உள்ள விவசாயிகள் தங்களது பெயரில் பட்டா மாற்றம் பெற்று அதனுடன் ஆதார் எண்ணை இணைத்து பதிவு செய்து தனித்துவ விவசாய அடையாள அட்டை பெற்றால் மட்டுமே அரசின் மூலம் வழங்கும் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து கிடைக்கும்.
எனவே வேதாரண்யம் பகுதி விவசாயிகள் உடனடியாக தங்கள் வட்டார வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களை அணுகி தனித்துவ அடையாள அட்டைக்கு நவம்பர் 10ந்தேதிக் குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என வேதாரண்யம் வேளாண்மை உதவி இயக்குனர் சத்தியசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.
