சீர்காழி, அக்.7: சீர்காழி அருகே கனமழையால் 50ஏக்கரில் விதைக்கப்பட்ட சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.w
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் குறுவை சாகுபடி முடிவடைந்த பகதிகளில் 45 ஆயிரம் ஏக்கரில் சம்பா நடவு பணிகள் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு, நாங்கூர், மணிக்குகிராமம், எம்பாவை, மங்கைமடம், ஆதமங்கலம், பெருமங்கலம், கற்கோயில், தொழுதூர், கன்னியாகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சம்பா நேரடி நெல் விதைப்பு, சம்பா நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே திங்கள் கிழமை இரவு சுமார் ஒன்றரை மணி நேரம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த கனமழையால் தொழுதூர், கன்னியாகுடி, கற்கோயில் கிராமங்களில் நேரடி விதைப்பு மூலம் நெல் நடவு வயல்களில் சாகுபடி செய்திருந்த 50ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியது. இதனால் வேதனையடைந்த விவசாயிகள் வயல்களில் சூழ்ந்த மழைநீரை வடியவைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.